வரவு செலவு திட்டத்தில் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை : ஜே.வி.பி!

நாட்டில் இதுவரை முன்வைக்கபட்ட வரவு செலவு திட்டங்களை போன்றே சம்பிரதாயபூர்வமான திட்டமொன்றை இம்முறை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று காரணமாக அனைத்து மக்களும் பாதிக்கபட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி வரவு செலவு திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து, அவ்வாறான ஒரு புதிய வரவு செலவு திட்டத்தையே எதிர்பார்த்திருந்ததாகவும், அதனை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாதிக்கபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கு உரிய திட்டங்கள் மற்றும் நீண்டகால திட்டங்கள் என்பன வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுனில் ஹன்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவுகளை ஈடுசெய்வதற்கான வருமானத்தை ஈட்டும் வழிமுறைகள் அரசாங்கத்தினால் முன்மொழியப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கமானது எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை மையப்படுத்தி எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ள நிலைமையில், அதற்கான வரிகளை அதிகரித்து வருமானங்களை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பது எந்தவகையில் பொருத்தமாக அமையுமெனவும், அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களின் முன்னெற்றத்திற்கு ஆதாரமாக அமைந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதனை பார்க்க முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சுனில் ஹன்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!