நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 356 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனாத் தொற்றைக் கண்டறிவதற்காக நேற்றைய தினம் 10 356 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் 439 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டனர்.

இதன்படி, அவர்களில் 437 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இரண்டு பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானோர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம், கொழும்பு மாவட்டத்தில் 305 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 58 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 838 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, அவர்களில் , 15 324 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பில் மூவாயிரத்து 59 பேரும், பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்பில் 12 ஆயிரத்து 265 பேரும் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களில், ஒன்பதாயிரத்து 478 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் மொத்தமாக 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து 2 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐயாயிரத்து 867 பேர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக, கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் பேர், தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில், மூவாயிரத்து 812 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!