11 மாவட்டங்களை புரட்டி எடுக்கவிருக்கும் நிவர் புயல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 21ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வானது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயர் வைத்துள்ளது.

இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்குவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி, காரைக்கால்-மகாபலிபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது எந்தெந்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவாரூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இந்த காற்றும் இன்று காலை முதல் இரவு வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!