ஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா? வெக்கக்கேடானது – சபா குகதாஸ்

தமிழர்களின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூறுவதை தடுக்கும் ஆட்சியாளர்கள் துட்டகைமுனு
பரம்பரையினரா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,

“எல்லாளனை போரில் வெல்வது சாத்தியமில்லை என்றதும் தனிச் சமருக்கு துட்டகைமுனு அழைத்தபோது எல்லாளன் வயது முதிர்ந்தவனாக இருந்தாலும் வயதில் மிகக் குறைந்த துட்டகைமுனுவுடன் அநுராதபுர இராச்சியத்தின் மேற்கு வாசலில் தனிச்சமருக்கு செல்கிறான் அந்த சண்டையில் தந்திரமாக எல்லாளனின் நேர்மையான பலவீனங்களை கையாண்டு துட்டகைமுனு வெற்றி பெறுகிறான். எல்லாளன் நிலத்தில் சரிந்து வீரமரணமடைகிறான்.

ஆனால் துட்டகைமுனு மரணமடைந்த எல்லாளனது உடலை மரியாதையுடன் அடக்கம் செய்து அதன் அஸ்தியை வைத்து அதே இடத்தில் சமாதி கட்டியதுடன் அவ்வழியாக செல்லும் போது ஒலி எழுப்பாது அமைதியாக செல்ல வேண்டும் எனவும் கட்டளையிட்டதாக வரலாறு கூறுகின்றது.

இத்தகைய வரலாற்றுப் பரம்பரையில் வந்தோம் என கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழர்களின் விடுதலைக்காக உயிர் நீர்த்த தியாகிகளை நினைவு கூறுவதற்கு அவர்களது அடிப்படை உரிமையை கூட நீதிமன்றத்தின் மூலம் இரும்புக் கரங்களை கொண்டு அடக்கும் இவர்களா துட்டகைமுனு பரம்பரை என்கிறார்கள்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய தனது சத்தியபிரமாணத்தை கூட துட்டகைமுனுவின் நினைவு சிலைக்கு அருகாமையில் நின்று தான் எடுத்துக் கொண்டார். அவ்வாறு தங்களை துட்டகைமுனு பரம்பரை என பறைசாற்றும் ஆட்சியாளர் அவர்களின் முன்மாதிரியான செயல்களை பின்பற்றாது செயற்படுதல் தமிழர்கள் மத்தியில் வெறுப்பையும் மனவுழைச்சளையும் ஏற்படுத்தியுள்ளது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!