கடுமையான பொது முடக்கத்தை அமுல்படுத்துமாறு கெஞ்சும் ஜேர்மன் நிபுணர்கள்!

தயவு செய்து கடுமையான பொது முடக்கத்தை அமுல்படுத்துங்கள் என ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலிடம் நிபுணர்கள் கெஞ்சியுள்ளார்கள். அத்துடன் தொடர்ந்து ஜேர்மனியில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து, ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரையாவது பொது வாழ்க்கையை முடக்குமாறும் அவர்கள் சேன்ஸலரை வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் காலம் முழுவதும் அரசுக்கு ஆலோசனைகள் அளித்துவந்த ஜேர்மன் தேசிய அறிவியல் கழகம், தற்போது அரசியல்வாதிகள் முன் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இரண்டு கட்ட பொதுமுடக்க திட்டம் ஒன்றை முன்வைத்துள்ள அந்த அமைப்பு, முதல் கட்டமாக, மாணவ மாணவியர் டிசம்பர் 14 வரை பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பணி செய்வோர் வீடுகளிலிருந்தவண்ணம் பணி செய்யவேண்டும் என்றும், விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டமாக, கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து, குறைந்தது 2021 ஜனவரி 10 ஆம் திகதி வரையாவது பொது வாழ்க்கை பெருமளவில் முடக்கப்படவேண்டும், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்றவை மூடப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்னொரு திட்டம், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஜனவரி 10 வரை நீட்டிப்பது, விடுமுறைக்கு வேறிடங்களுக்கு செல்வது மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்ப்பது ஆகிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை 28 அறிவியலாளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.

ஜேர்மனியில் இதுவரை கொரோனாவுக்கு 19,342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாட்டில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனாவால் பலியாவதாக பவேரிய பிரீமியர் Markus Soeder தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!