மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்த அடுத்த கட்ட எச்சரிக்கை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 15-வது நாளை எட்டியது.

இந்த போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை ரத்தானது. எனினும் விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு சில பரிந்துரைகளை விவசாய பிரதிநிதிகளுக்கு அனுப்பி உள்ளது.

ஆனால் இவற்றை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அறிவித்து உள்ளனர். அந்தவகையில் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் அடைக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆனால் அரசு தெரிவித்த யோசனைகளை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் நேற்று அறிவித்தனர். இது தொடர்பாக விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான பூட்டா சிங் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், ரெயில்வே தண்டவாளங்களை முற்றுகையிட்டு ரெயில் போக்குவரத்தை முடக்குவோம். அதற்கான தேதியை முடிவு செய்து விரைவில் அறிவிப்போம்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல மற்றொரு தலைவரான பல்பிர் சிங் ராஜேவால் கூறும்போது, ‘வியாபாரிகளுக்காக இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டு உள்ளது. விவசாயம், மாநிலம் சார்ந்தது என்றால், அதற்கான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடந்து வரும் போராட்டங்களை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளதால் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!