கொரோனாவினால் உயிரிழந்த 15 வயது சிறுவன் – நேற்றைய நாளில் இரு உயிரிழப்புக்கள் பதிவு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன், கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மரணத்திற்கான காரணமாக, கொரோனா தொற்று நிமோனியா தாக்கம், இரத்தம் நஞ்சானமை மற்றும் லுக்கேமியா நோய் தாக்கம் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், கொரோனா தொற்று நிமோனியா தாக்கம் காரணமாக, கொழும்பு 7 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!