கொரோனாவை இல்லாதொழிப்பது தொடர்பில் பிரதமரின் அதிரடி தீர்மானம்!

கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் Razia Pendse, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் முகாமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கான ஆதரவை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இதன்போது உறுதியளித்துள்ளது.

பல நாடுகள் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கைக்கு இந்த தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உறுதியளிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சவால் மிகுந்த காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கு மிகுந்த கடப்பாட்டுடன் காணப்படுவதாக ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 20 வீதம் என்ற இலக்கை விட அதிகமான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டு கொண்டதன் பின்னரும் இத்தொற்று குறித்து எவரும் அலட்சியமாக செயற்பட முடியாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்பூசியின் மூலம் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியுமெனினும், அதன் மூலம் தொற்று பரவலை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!