இறுதி தருணத்தில் 15 பேருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலக உள்ள குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் 15 பேருக்கு மன்னிப்பு வழங்கியதுடன், ஐந்து பேரின் தண்டனையை குறைத்துள்ளார். உலக நாடுகள் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனே வெற்றி பெற்றார்.

ஏனெனில் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து டிரம்ப் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தார். அதுமட்டுமின்றி கொரோனாவை அவர் கையாண்ட விதம் அமெரிக்க மக்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.

அவர் சற்று கவனமாக இருந்திருந்தால், இந்தளவிற்கு அமெரிக்காவில் கொரோனா பரவல் இருந்திருக்காது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் 20-ஆம் திகதி பதவி விலக உள்ள டிரம்ப், தனது கட்சியைச் சேர்ந்த சில. எம்.பி.க்கள் உள்பட 15 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன் மூலம் இவர்கள் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவர்.

இதைத் தவிர ஐந்து பேரின் தண்டனையை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தண்டனை வழங்கினாலும் மன்னிப்பு வழங்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் சிலருக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு முன் ஏற்கனவே 27 பேருக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார். தனக்குரிய அதிகாரத்தில் 2 சதவீதத்தையே அவர் பயன்படுத்தியுள்ளார்.

அதிபராக இருந்த பராக் ஒபாமா 212 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். அதாவது 6 சதவீதம் பயன்படுத்தியுள்ளார்.ஜார்ஜ் டபிள்யூ புஷ் 7 சதவீத அதிகாரத்தை பயன்படுத்தி 189 பேருக்கு மன்னிப்பு அளித்துள்ளார். அவருடைய தந்தையான ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் 10 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!