தீவிரமடையும் போராட்டம்: 1,400 செல்போன் கோபுரங்கள் சேதம்!

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை 1 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களையும் மீறி இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு விவசாயிகளுடன் ஏற்கனவே நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. எனினும் அடுத்தசுற்று பேச்சுவார்த்தைக்காக விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இதை ஏற்று 29-ந்தேதி (நாளை) பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசுக்கு பரிந்துரைத்திருக்கின்றனர். அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் எனவும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் இந்த போராட்டத்தில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். அதேநேரம் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன.

அந்தவகையில் பஞ்சாப்பின் ஜலாலாபாத்தை சேர்ந்த அமர்ஜித் சிங் என்ற வக்கீல், நேற்று டெல்லியின் திக்ரி எல்லை அருகே வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போராட்டக்களத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் நடந்த இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொள்ளுமுன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எனது உயிரை தியாகம் செய்கிறேன். விவசாயிகளின் குரலை அரசு கேட்க வேண்டும். இந்த சட்டங்களால் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற சாதாரண மக்கள் தாங்கள் மோசடிக்கு உள்ளாகி இருப்பதாக நினைக்கின்றனர். எனவே இந்த கறுப்பு சட்டங்களை அரசு திரும்ப பெற வேண்டும்’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முன்னதாக விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் சீக்கிய மதகுரு ஒருவரும், 22 வயதான இளம் விவசாயி ஒருவரும் ஏற்கனவே தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானாவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரியானாவில் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை நேற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பஞ்சாப்பில் தொழிலதிபர்களான அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சொந்தமான செல்போன் கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக பஞ்சாப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நேற்று முன்தினமும், நேற்றுமாக மாநிலத்தில் ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தி உள்ளனர். அங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் இருந்த ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இந்த 176 கோபுரங்களையும் சேர்த்து இதுவரை 1,411 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கடந்த 25-ந்தேதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து வன்முறையில் இறங்கி வருகிறார்கள்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி (மன்கீ பாத்) வரும் பிரதமர் மோடி, இந்த மாதத்துக்கான உரையை நேற்று நிகழ்த்தினார். இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, பஞ்சாப், அரியானாவில் நேற்று விவசாயிகள் மோடியின் உரை ஒலிபரப்பான நேரத்தில் தட்டுகளை தட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் மருத்துவத்துறையினரை ஊக்குவிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் இதுபோன்று ஒலி எழுப்ப பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த அடிப்படையில் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இந்த ஒலி எழுப்பும் நிகழ்ச்சியை நடத்தியதாக விவசாய அமைப்பு தலைவர்கள் தெரிவித்தனர்.

பஞ்சாப், அரியானா மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் இந்த எதிர்ப்பு குரல் எழுப்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல இடங்களில் பொதுமக்களும் விவசாயிகளுடன் சேர்ந்து ஒலி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!