கொரோனா தடுப்பூசி தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்!

நாட்டில் கொரோனா தடுப்பூசி பாவனை தொடர்பிலான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகருமான லலித் வீரதுங்கவை மேற்கோள் காட்டி முன்னணி ஆங்கில நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் வகை மற்றும் அதனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான காலப்பகுதி ஆகியன குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

அத்துடன், நாட்டில் தடுப்பூசியினை விநியோகிப்பது குறித்த சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி செயற்றிட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி செயலணி ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், கொரோனா தடுப்பூசியினை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் இறுதித் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!