“கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையையே தமிழ் மக்கள், விரும்புகிறார்கள் என்ற போதும், அது உயரிய கொள்கை வழியிலான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்ற ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் ஏற்புரையை வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எமது சிறப்பு அதிதியான சம்பந்தன், காலம் தாழ்த்தி எம்முடன் இணைய சம்மதித்திருந்தாலும் அவர் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டி உள்ளது.

என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டு வராது இருக்க முடியாதவன் நான்.

அதனால் எனக்கும் கட்சிக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பினும், எனது நிலையைப் புரிந்து, நடவடிக்கைகளில் இருந்து இறங்கி வந்தவர் சம்பந்தன்.

ஆனால் சிலர், என்னை கட்சியில் இருந்து வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்

சம்பந்தனின் வருகையாலோ என்னவோ, கூட்டமைப்பைச் சேர்ந்த பலர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வந்துள்ளனர். அவருக்கும் அவ்வாறான பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அரசியல் ரீதியாக எமது எல்லாக் கட்சிகளின் ஒற்றுமையையே, தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். ஒற்றுமையானது கொள்கை ரீதியிலேயே அமைய வேண்டும்.

தம்பி பிரபாகரன், தனது இயக்கத்துக்கு எதிராக நடந்து கொண்ட கட்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து, ஓர் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

அப்போது கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட கட்சிகள் சில இன்று வெளியிலே நிற்கின்றார்கள். அது கொள்கை முரண்பாடுகள் காரணமாக இருக்கலாம். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இருக்கலாம்.

ஆனால், ஓர் ஏற்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து, கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.

மத்தியில் கூட்டாட்சி, மாகாணத்தில் தன்னாட்சி என்று கூறிவிட்டு, மத்தியின் முகவர்களாக நடந்து கொண்டு வந்திருப்பவர்கள் எமது பயணத்துக்கு இடையூறு விளைவிக்கக் கூடியவர்கள்.

அதேபோல், தேசியக் கட்சிகளின் அங்கத்தவர்கள் மத்தியின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் எமது உறவுகளாக இருந்தாலும் எமது பயணத்தில் சேரக்கூடியவர்கள் அல்ல.

சிலர் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவர்களை எமது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வாசிக்கக் கோருகின்றேன்.

சிலர் மக்களின் வாக்கெடுக்க அப்படித்தான் தேர்தல் அறிக்கைகளில் போடவேண்டும். ஆனால், நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அவற்றையெல்லாம் புறம்தள்ளி வேலைசெய்ய வேண்டும் என்கிறார்கள்.

அவ்வாறானவர்கள் தான் என்னைத் தீவிர போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறான போக்கை நான் கண்டிக்கின்றேன்.

மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது பாவம் என்பதே எனது நிலைப்பாடு. தேர்தல் அறிக்கைகளில் கூறியிருப்பதை அசட்டை செய்வதாக இருந்தால் அவற்றை மாற்றி மக்களிடம் இருந்து பிறிதொரு முறை அவர்கள் ஆதரவைப் பெறுவது அவசியம்.

அண்மையில் கட்சி நலம் சார்ந்து பல உடன்படிக்கைகள், உள்ளூராட்சி மன்றங்களில் எட்டப்பட்டன. கொள்கை ரீதியாக அவை நடைபெறவில்லை. பதவி ஆசையே முக்கிய குறிக்கோளாக இருந்தது.

இவ்வாறான கொள்கை அடிப்படை தவிர்ந்த உடன்பாடுகள் விரைவில் , சுய இலாபங்களுக்காக முரண்பாடுகளை வருவிப்பன என்று எதிர்பார்க்கலாம்.

விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி எம்மை நாம் விற்கும் நிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலே மத்தியிலும் மாகாணத்திலும் கடைப்படிக்க வேண்டியுள்ளது.

வெளியார் குடியேற்றம், பௌத்த விகாரைகள்கட்டப்படுதல் போன்ற எல்லாவற்றுக்கும் சுய கௌரவத்துடனான இணைந்த அரசியலை நாம் நாடாததே காரணம்.

தமிழ் மக்களின் அரசியல் நிலை இன்று பரிதாபகரமானதாக மாறியுள்ளது, கட்சி ரீதியாக நாம் பிரிந்துள்ளோம்.

ஆனால் எமது பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் காணும் உள்ளடக்கங்களில் உள்ள முரண்பாடுகள் மிகச்சொற்பமே.

2013ஆம் ஆண்டு வெளிவந்த எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அடிப்படையாக வைத்தே நான் எனது கருத்துகளைத் தெரியப்படுத்தி வந்துள்ளேன்.

வெவ்வேறு மனோநிலைகள் கொண்ட இவர்கள் யாவரையும் ஒன்றிணைத்துச் செல்வது அவ்வளவு இலேசான காரியமல்ல.

ஆனாலும் இன்றைய எமது தமிழ் மக்களுக்கு ஒற்றுமை அவசியம். ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம்.

உயரிய கொள்கைகளை உள்ளடக்கி அவற்றின் அடிப்படையில் சுயநலம் களைந்து முன்னேறுவதே இன்று தமிழ் மக்களுக்கிருக்கும் ஒரேயோர் அரசியல் பாதையாகும்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!