முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சார்பான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான அணி என்று இரண்டு துருவங்கள் உருவாகியிருந்தன.

அவ்வப்போது, இந்த இரண்டு தரப்புகளும் அறிக்கைகள், உரைகளினால் மோதி வந்தன.

எனினும், இந்த அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கி விட்டு, நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிர கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நாடாளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெரும்பாலான பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்த நிகழ்வில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், சரவணபவன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும், ஈபிடிபி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் இதில் பங்கேற்றனர்.

அதேவேளை, இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!