கொரோனா ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவரும் கியூபெக் மாகாணம்: மீறினால்…!

கனடாவின் கியூபெக் மாகாணம் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரங்களில் மாகாண குடிமக்கள் கட்டாயம் குடியிருப்புக்குள் தங்கியிருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறுவோருக்கு 6000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த ஊரடங்கானது பிப்ரவரி 8 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

கியூபெக் மாகாணம் முழுவதும் எதிர்வரும் சனிக்கிழமை முதல் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும், ஆனால் குப்பை அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும். உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும்.

திட்டமிட்டபடி தொடக்கப் பள்ளிகள் ஜனவரி 11 ஆம் திகதி திறக்கப்படும், ஆனால் 5 மற்றும் 6 ஆம் வகுப்பு குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிகள் இன்னும் ஒரு வாரம் மூடப்பட்டு, ஜனவரி 18 ஆம் திகதி திறக்கப்படும். மளிகைக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் இரவு 7:30 மணிக்கு மூடப்படும்.

மேலும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து கியூபெக் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!