இணையத்தள மோசடி : நைஜிரியா நாட்டு பிரஜைகள் மூவர் கைது!

இணையத்தள மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் நைஜிரியா நாட்டு பிரஜைகள் மூவர் நுகேகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 22 போலி அடையாள அட்டைகள், 18 வங்கி கணக்குப் புத்தகங்கள், 29 ஏ.டி.எம். அட்டைகள், 12 கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினி மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நைஜீரிய பிரஜைகளினால் நாட்டில் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த சந்தேக நபர்கள் மின்னஞ்சள் கணக்குகளை ஊடுருவுவதன் ஊடாக மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இணையத்தளம் மூலம் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுவதுடன், வங்கி கணக்குகளை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!