ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டாம்! – சட்டமா அதிபர் தடை

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில், விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கையின் பின்னிணைப்புகளை வெளிப்படுத்த வேண்டாம் என்று , ஜனாதிபதியின் செயலாளருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் கோரிக்கைக்கு அமையவே, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவால், இந்தப் பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையின் சில பிரிவுகளைப் பகிரங்கப்படுத்தினால், அது தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் குற்றவியல் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளின் மீது, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென, அந்தப் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த விசாரணை அறிக்கையின் சில பின்னிணைப்புகளை பகிரங்கப்படுத்தினால், அது விசாரணைகளுக்கு எவ்விதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது என்றும், சட்டமா அதிபர், தன்னுடைய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, இலங்கை மத்திய வங்கி மற்றும் நாணய வாரியம் ஆகியன அனுப்பிவைத்துள்ள இரகசிய அறிக்கையை, பகிரங்கப்படுத்த வேண்டுமாயின், அந்தந்த நிறுவனங்களின் பரிந்துரைகள் அவசியமாகும் என்றும், அந்தப் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆணைக்குழுவுக்கு மூன்றாவது தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பில், தனித்தனியாக பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் விவரங்கள் தொடர்பில், விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், அந்தப் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!