மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் திரண்டு எதிர்ப்பு போராட்டம்! – யாழ். பல்கலைக்கழகம் முன் பதற்றம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும், ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை. அத்துடன் பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்றிரவு ஒன்பது மணி தொடக்கம் பதற்றமான நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் தடையையும் மீறி பல்கலை வளளாகத்துக்கு உள்ளே சென்ற மாணவர்களும் சட்டத்தரணி க.சுகாஷும் உறுதி செய்துள்ளனர்.

அத்துடன், நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர் என மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!