முகக் கவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் முகக் கவசங்களை அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களில், இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

முகக் கவசங்களை அணியாத நபர்களை, கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை, கடந்த ஐந்தாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, முகக் கவசங்களை அணியாது செயற்பட்ட 121 பேர், நேற்றைய தினம் PCR மற்றும் RAPID ANTINGEN பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

இந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்து 513 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, அவர்களில் 48 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட 28 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், இரண்டாயிரத்து 490 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியிடங்களுக்கு பயணிக்கும், பேருந்து பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பின் வெள்ளவத்தை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணிக்கும் பேருந்துப் பயணிகளுக்கு நேற்று மாலை RAPID ANTIGEN பரசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 103 பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் வார சந்தைகளில், நேற்றைய தின் 184 பேருக்கு RAPID ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கும் செல்லும் நபர்களை, RAPID ANTIGEN பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதன்படி, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில், நேற்றைய தினம் 504 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

அத்துடன், பாடசாலை போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் 36 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!