கோவிட்-19: ஒரே நாளில் அதிக உயிரிழப்பை பதிவு செய்த பிரித்தானியா!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மரண எண்ணிக்கை எப்போதும் இல்லாத புதிய உச்சம் தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உருமாறிய வீரியம் மிக்க கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,564 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்து இது எப்போதும் இல்லாத புதிய உச்சம் என கூறப்படுகிறது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,525 எனவும், இதுவரை மொத்தம் 3,164,051 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,564 பேர்கள் பலியாகியுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 84,767 என பதிவாகியுள்ளது.

ஒரே வாரத்தில் அதிக இறப்பு எண்ணிக்கையில் உச்சம் தொடுவது இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 1,325 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில்,

அன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,058 என தெரிய வந்தது.

இது இதுவரை தொற்றுநோய் பரவல் தொடங்கிய நாள் முதல் மிகக் கொடிய வாரமாக பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஏழு நாட்களில் சராசரியாக தினசரி இறப்பு எண்ணிக்கை 931 எனவும் பதிவாகியுள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 100,000 ஐ விட அதிகமாக இருக்கலாம் என்று பிரஸ் அசோசியேஷன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே பிரதமர் ஜோன்சன் தலைமையிலான நிர்வாகம் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கலாமா என்பது தொடர்பில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!