‘தவளைக் கொத்து’ -அம்பலாந்தோட்ட ஹோட்டலில் அதிர்ச்சி!

கோழி கொத்தில் தவளையின் கால்கள் இருந்ததால், அதனை வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார். அம்பலாந்தோட்ட- மல்பெத்தாவ பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் வாங்கப்பட்ட கோழி கொத்துரொட்டி பொதியிலேயே, தவளையொன்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கொத்துரொட்டியை வாங்கிய பெண்ணொருவர், அதனை சாப்பிடுவதற்காக, பொதியைப் பிரித்துள்ளார். அதன்போதே, சாப்பாட்டுக்குள் மர்மமான பொருளொன்று கிடப்பதை அவதானித்துள்ளார். சந்தேககம் கொண்ட அப்பெண், நன்றாக ஆராய்ந்து பார்த்தபோது, அதில் தவளையொன்றின் கால்கள் உள்ளிட்ட இன்னும் சில உறுப்புகள் கிடந்துள்ளன.

விரைந்து செயற்பட்ட அப்பெண், கொத்துரொட்டி பொதியுடன் சென்று, அம்பலாந்தோட்ட சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி. மாலக சில்வாவிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த கொத்துரொட்டி பொதியுடன், அதனை தயாரித்த ஹொட்டலுக்குச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அம்பலாந்தோட்ட பொது சுகாதார பரிசோதகர் கே.ஜீ.நிசாந்த, குறித்த ஹொட்டலின் உரிமையாளரான பெண்ணிடம், கடந்த சனிக்கிழமை வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர், தவளையுடனான கொத்து ரொட்டி பொதியை, தனது ​பொறுப்பின் கீழ், பொது சுகாதார பரிசோதகர் கொண்டுவந்தார். அதுமட்டுமன்றி, குறித்த ஹொட்டலின் உரிமையாளரான பெண்ணை, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!