தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள்- கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் டிசம்பர் 1-ம் தேதி முதல் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வந்தது. அதன்படி கடந்த 6,7 மற்றும் 8 தேதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பெற்றோர் பாக்கிகள் திறக்க ஆதரவு தெரிவித்ததை அடுத்து நாளை முதல் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. விருப்பத்தின் பெயரில் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!