மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

தனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதனடிப்படையில் 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில் இருந்த வீடுகள், கைத்தொழில்துறையினர் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலமாக 6 மாதம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சுற்றுலாத்துறையினர் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில் மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்திருந்த யோசனைகளின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவுசெய்யப்பட்ட திரையரங்குகளுக்கு 12 சமமான மாதங்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன், அதுவரை மின்துண்டிப்பினை மேற்கொள்ளாது இருப்பதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாத்துறை அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 2021 பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான மின் கட்டணப்பட்டியலை 12 சமமான மாதங்களுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன் அதுவரை மின்துண்டிப்பினை மேற்கொள்ளாதிருப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!