இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்தும் ‘வாட்ஸ்அப்’: மத்திய அரசு குற்றச்சாட்டு!

வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் ‘வாட்ஸ்அப்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்தி வருகிறது. வாட்ஸ்அப் சமீபத்தில் புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது.

அதன்படி, வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தரவுகள், பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவித்தது. இந்த புதிய விதிமுறை, நிபந்தனைகள், பிப்ரவரி 8-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதை ஏற்றுக்கொள்ளாத கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறியது.

இந்த கொள்கை, பயனாளர்களின் பாதுகாப்பில் குறுக்கிடும் செயல் என்று பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. பலரும் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறினர். இதையடுத்து, தனியுரிமை கொள்கையை தள்ளி வைப்பதாக வாட்ஸ்அப் அறிவித்தது.

இதற்கிடையே, வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வக்கீல் வழக்கு தொடர்ந்தார் அந்த மனு, நேற்று நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா ஆஜரானார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-

புதிய தனியுரிமை கொள்கையில் இந்தியாவை சேர்ந்த பயனாளர்களை வாட்ஸ்அப் தன்னிச்சையாகவே உட்படுத்தி இருக்கிறது. அவர்களின் தரவுகள், பேஸ்புக் உள்ளிட்ட அதன் இதர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ஆனால், தனது ஐரோப்பிய பயனாளர்கள், இந்த கொள்கையில் இருந்து விலகிக்கொள்ள வாட்ஸ்அப் வாய்ப்பு அளித்துள்ளது. அந்த வாய்ப்பை இந்திய பயனாளர்களுக்கு வழங்கவில்லை. எனவே, இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துவது மேலெழுந்தவாரியாக பார்க்கும்போதே தெரிகிறது.

இது பெரிதும் கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது. சில தகவல்களை கேட்டு வாட்ஸ்அப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதற்கு ‘வாட்ஸ்அப்’ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘‘மத்திய அரசு அனுப்பிய கடிதம் வந்துள்ளது. அதற்கு பதில் அளிப்போம்’’ என்று கூறினார்.

அடுத்தகட்ட விசாரணை மார்ச் 1-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!