பாகிஸ்தானில் பரபரப்பு – வானத்தில் தோன்றிய பறக்கும் தட்டு?

பாகிஸ்தானில் கடந்த 23-ந் தேதி முல்தானுக்கும், சாஹிவாலுக்கும் இடையேயான வான்வெளியில் அசாதாரணமான ஒரு பொருள் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்ததை தனது விமானி ஒருவர் கண்டதாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது. அது பிற கிரகத்தில் இருந்து வந்த பறக்கும் தட்டு என வதந்தி பரவியது.

இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “விமானி தனது விமானத்தில் இருந்து 1000 அடி உயரத்திலும், தரையில் இருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரத்திலும், அசாதாரணமான ஒரு பொருள் சுற்றிக்கொண்டிருப்பதை கண்டு அதை படம் பிடித்துள்ளார். அவர் உண்மையில் கண்டது என்ன என்பதை உடனடியாக சொல்லி விட முடியாது. இதுகுறித்து அந்த விமானி அறிக்கை அளித்துள்ளார். அதே நேரத்தில் அது பறக்கும் தட்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். இது பற்றி நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி ஜியோநியூஸ் கூறுகையில், “மாலை 4.30 மணியளவில் விமானியால் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சூரிய ஒளிக்கு மத்தியிலும் மிகவும் பிரகாசமான தெரிந்தது” என தெரிவித்துள்ளது.

இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!