பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை அரம்பம்!

பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை, நாளைய தினம் (31) முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, இந்த நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு, பொலிஸ் வைத்தியசாலை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அத்துடன், கண்டி – குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையிலும், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்

நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கை, நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, முதலாவது கொரோனா தடுப்பூசி இராணுவ வைத்தியசாலையில் மூவருக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நாட்டில் Astra Zeneca Covishield கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட முதலாவது சுகாதார பணியாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு அமைவாக 5 ஆயிரத்து 286 பேருக்கு நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளில் ஆயிரத்து 584 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராணுவ வைத்தியசாலையில், 600 பேருக்கும், கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் 382 பேருக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி வழங்கபட்ட எவருக்கும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!