கொரோனா தொற்று பரவலை அபாயகரமானதொரு விடயமாக கருத வேண்டும் -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா தொற்று பரவலை அபாயகரமானதொரு விடயமாக பொதுமக்கள் கருத வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைக் காலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதன் காரணமாக நாடு அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், PCR முடிவுகளை தாமதமாக வெளியிடுவதால் எந்த பயனும் இல்லை எனவும், அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹரித அலுத்கே கூறியுள்ளார்.

இவ்வாறான குறைபாடுகள் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!