இலங்கையில் ஆட்சி அமைக்க விரும்பும் பா.ஜ.க: சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர் திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப். வழக்கமாக இந்திய அரசியல் குறித்தும், தனது மாநில விவகாரங்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர், இம்முறை சர்வதேச அரசியல் குறித்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தற்போதைய உள்துறை மந்திரியான அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவராக இருந்தபோது அகர்தலா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், இந்திய மாநிலங்களை தாண்டி நேபாளம் மற்றும் இலங்கையிலும் ஆட்சியை விரிவுபடுத்த கட்சி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்’ என்று கூறினார்.

திரிபுரா முதல்-மந்திரியின் இந்த பேச்சு மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இறையாண்மை மிகுந்த நேபாளம், இலங்கை நாடுகளுக்கு எதிராக ஜனநாயக விரோதமாக பேசியிருக்கும் முதல்-மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இது அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனவும், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை பாதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முதல்-மந்திரி ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!