கொரோனா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட சுவிஸ் மருத்துவர் இடைநீக்கம்!

கொரோனா வெறும் சாதாரண வைரஸ் தான், பொதுமக்களை பயப்படுத்தவே பூதாகரமாக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்ட சுவிஸ் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவரே கொரோனா தொடர்பில், வித்தியாசமான கருத்தை வெளியிட்டு தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்.

ஒஸ்டினெல்லியின் அறிக்கைகள் குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் டிசினோ மருத்துவ சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பிலே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசியல் மற்றும் சுகாதார அதிகாரிகள், மண்டல மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மருத்துவர்கள் ஆகியோரின் தன்னலமற்ற பணிகளை ஒஸ்டினெல்லி மட்டம்தட்டியுள்ளார் எனவும் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மருத்துவர் ஒஸ்டினெல்லிக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநீக்கம் செய்யப்பட்டது தற்காலிகமானது எனவும், அவர் அளிக்கும் விளக்கம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் எனவும் சுவிஸ் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!