அமெரிக்காவில் பனிப்பொழிவை ரசித்த 11 வயது சிறுவன் உடல் உறைந்து பலியான சோகம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முறையாக பனிப்பொழிவைப் பார்த்து உற்சாகமடைந்த 11 வயது சிறுவன் உடல் உறைந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணம் கடும் பனிப்பொழிவால் மொத்தமாக முடங்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 4.4 மில்லியன் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கடும் பனிப்பொழிவுக்கு இதுவரை 47 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் 11 வயது சிறுவன் கிறிஸ்டியன் உட்பட 30 பேர் மரணமடைந்துள்ளனர்.

சிறுவன் கிறிஸ்டியன் தனது அம்மாவுடன் வசிப்பதற்காக 2019 ல் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸிலிருந்து அமெரிக்கா வந்துள்ளார்.

வாழ்க்கையில் இதுவரை பனிப்பொழிவை நேரில் பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன், கடந்த சில நாட்களாக மிகுந்த குதூகலத்தில் இருந்துள்ளான்.

ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவை தாங்க முடியாமல் உடல் உறைந்து மரணமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

செவ்வாய் அன்று தங்கள் மொபைல் குடியிருப்பில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளான் சிறுவன் கிறிஸ்டியன்,

மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பனிப்பொழிவும் கடுமையாகவே, சிறுவன் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளான்.

தாயாரும் வளர்ப்பு தந்தையும் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் மின்சாரம் இல்லாமல் சுமார் 200,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் 10 மில்லியன் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கொள்ளை விலை ஈடாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!