ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்முறை காணொளி தொழினுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20 ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது அமர்வு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு எதிராக, முன்வைக்கப்பட்ட இந்த யோசனை தொடர்பில் நாட்டை நேசிக்கும், இலங்கை மக்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், அரசியலமைப்புக்கு முரணான இந்த பிரேரணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்வதாகவும் அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை முன்வைக்க விரும்புவதாக, பல்வேறு நாடுகள் தெரிவித்திருந்தன.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசிடோனியா மற்றும் Montenegro ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய அமைதிக்கான தமது உறுப்பாட்டை தாம் வெளிப்படுத்துவதாக, குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகவும், நாட்டின் இறையாண்மையை எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் கேள்விக்கு உட்படுத்தெ முடியாது எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!