அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை, அரை அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் இவற்றில் உள்ளடங்குவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரச ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்ற உதவி புரியுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டுமாயின், அரச சேவை வலுவானதாகவும், செயற்றிறன் மிக்கதாகவும் காணப்பட வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்வரும் காலத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும், அரச நிறுவனங்கள் தமக்கு தேவையான நிதிக்காக திறைசேரியை நம்பியிருப்பதைத் தவிர்த்து, அவற்றை இலாபகரமான நிறுவனங்களாக மாற்ற உதவுமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வலுவான தொழில்துறை அமைப்பைக் கொண்டு மக்களை மையமாகக் கொண்ட உள்ளூர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!