பாகிஸ்தான் – இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று மாலை வருகை தந்தார்.

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சுற்றுலா ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாட்டு முதலீட்டு சபைகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் வர்த்தகக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை, இரு தலைவர்களும் நேற்றைய தினம் கூட்டு ஊடக சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வின் மூலம், கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!