பல்கலைக்கழக அனுமதி பெறாதர்களுக்கு விசேட திட்டம் முன்னெடுப்பது அவசியம்: ஜி.எல் வலியுறுத்தல்!

பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்காக 41 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், கடந்த முறையை விட 10 ஆயிரத்து 588 பேர் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதன்போது தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக கட்டமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதற்காக மேலும் 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, குறித்த மேலதிக நிதியை கட்டம் கட்டமாக, பல்கலைக்கழகங்களுக்கு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சிறந்த வெட்டுப் புள்ளிகளைப் பெற்ற போதிலும், பல்கலைக்கழக அனுமதி பெறாத மாணவர்களுக்காக விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படுவது அவசியம் என, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்தின் பின்னர் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய முதற்கட்டமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!