விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவு தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை எனவும், அது மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை தெரிவித்துள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியன, குறித்த சட்ட வரைவு இந்த நேரத்தில் தேவையற்றது என, வலியுறுத்தியதன் அடிப்படையில், குறித்த சட்ட வரைவு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் சரத்துகளை மீள்பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, சர்வதேச நீதி அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றையும், கவனத்திற் கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை, தவறான, ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக, இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 60/251 தீர்மானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது உள்ளிட்ட, சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த, மனித உரிமை ஆணையாளரின் பரிநிதுரையை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதும், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு முரணானதுமான அறிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!