வாக்குறுதிகளில் இருந்து விலகியதே இந்த நிலைக்கு காரணம்!

நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தியிருந்தால் இலங்கைக்கு எதிராக இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருக்காது.

எமது கட்சி, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை தோற்கடிக்க பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

ஜெனீவா தீர்மானம் நாட்டில் தற்போதய ஜனநாயக விரோத நடவடிக்கைகள், இராணுவ மயமாக்கல் மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோளிட்டுள்ளது. இருப்பினும் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுடனான மோதலை மட்டுமே அனைத்து அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டுவதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.