ஜெனிவா நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கிறதாம் இந்தியா!

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரம் மற்றும் தமிழ் மக்களின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களிலும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா அக்கறையுடன் அவதானத்தில் கொண்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இலங்கை பிரதிநிகளும் தங்களது மதிப்பீட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே இந்தியா இந்த விடயத்தில் சரியான முறையில் செயற்படும் .

எவ்வாறாயினும் தெற்காசியா பிராந்திய அமைதி மற்றும் நல்வாழ்வை இந்தியா என்றும் குறித்து நிற்கும். இலங்கை எங்கள் நெருங்கிய நண்பர் மற்றுமல்ல அண்டை நாடும் கூட. அந்த வகையில் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதியாக நிற்கும்.

இன நல்லிணக்கத்தை ஊக்குவித்தலை உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்க செயல்முறையை பரந்த உள்ளத்துடன் ஆதரிப்போம்.

தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து சமூக பிரிவினரும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான அபிலாஷைகளை அடைவது இலங்கைக்கு பலம் அளிக்கும்.

எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையின் நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டை பலப்படுத்தவும் உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!