லண்டனில் சொந்த குடும்பத்தாரிடம் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்: சிக்கியது எப்படி?

லண்டனில் வங்கியில் பணிபுரிந்த இளம்பெண் தனது குடும்பத்தாரிடம் பெரியளவில் பணமோசடி செய்து சொகுசாக வாழ்ந்தது அம்பலாமாகியுள்ளது. லண்டனின் கிரீன்விச்சை சேர்ந்தவர் ஹீயின் லீ (40). இவர் வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். லீ தனது குடும்ப உறுப்பினர்கள் மூவர்களிடம் £68,499 வரை பணத்தை வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை வங்கியில் முதலீடாக போடுவதாக கூறியே வாங்கியிருக்கிறார். பிற்காலத்தில் அந்த பணம் அதிகமாகி அவர்களுக்கு நன்மை கொடுக்கும் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார் லீ.

குடும்பத்தாரும் லீயிடம் பணத்தை கொடுத்து வைப்பது பாதுகாப்பானது என கருதி கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த பணத்தை லீ முதலீடு செய்யாமல் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தி சொகுசாக வாழ தொடங்கியிருக்கிறார்.

அதே சமயம் வங்கியில் பணத்தை போட்டதற்கான போலியான ஆவணங்களை குடும்பத்தாரிடம் காட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் வசமாக சிக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட லீயை பொலிசார் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி கைது செய்தனர்.

அவர் மீது தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தனது குற்றத்தை சமீபத்தில் ஒப்பு கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவருக்கான தண்டனை விபரம் மே மாதம் 11ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!