ஸ்தம்பித்த பிரித்தானியா: பாராளுமன்றம் நோக்கி படையெடுத்த மக்கள்!

லண்டனில் இளம்பெண் கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து பாராளுமன்றம் நோக்கி மக்கள் வெள்ளம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றம் நோக்கி அணிவகுத்துச் செல்வதற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நியூ ஸ்காட்லாந்து யார்டு அலுவலகத்திற்கு வெளியே திரண்டனர். ஒட்டுமொத்த பிரித்தானியாவையும் உலுக்கிய சாரா எவரார்ட் சம்பவத்தை அடுத்து நேற்று பொதுமக்கள் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மாலை 6 மணிக்கு பல முக்கிய பகுதிகள் உட்பட 31 இடங்களில் அஞ்சலி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் திடீரென்று கொரோனா விதிகளை சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தனர்.

இருப்பினும், சாரா எவரார்ட் கடைசியாக காணப்பட்டதாக கூறப்படும் பகுதியில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.

மட்டுமின்றி இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் குறித்த கூட்டத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசாருக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய மசோதா ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விவகாரங்களுக்காகவும் அணி திரண்ட மக்கள் பாராளுமன்றம் நோக்கி முழக்கமிட்டபடி சென்றனர்.

மேலும், சாரா எவரார்ட் அஞ்சலி கூட்டத்தில் பொலிசாரின் நடவடிக்கைக்கு பொறுப்பேற்று பொலிஸ் தலைவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என பொலிஸ் தலைவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வெளிப்படையாக கூறியிருந்த நிலையில்,

தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சனும், பொலிஸ் தலைவர் விவகாரத்தில் கலந்து பேசி உரிய முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!