உலகையே உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் மரணம்: குடும்பத்தினருக்கு 27 மில்லியன் டொலர் நிவாரணம்!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவரின் குடும்பத்திற்கு 196 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா பொலிஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் திகதி மினியாபொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டொலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார், ஜார்பிளாய்ட்டிடம் விசாரணை மேற்கொள்ள அவரை அழைத்தனர்.

அப்போது அவர் வர மறுத்ததால், அங்கு வந்த பொலிஸ் அதிகாரி, டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.

அப்போது, ஜார்ஜ் பிளாய்ட் என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என்று கெஞ்சிய போதும், அவர் விடவில்லை.

இதனால் அவர் மூச்சுவிடாமல் திணறி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு ஆதரவாக உலகம் முழுவதிலும் போராட்டம் நடந்தன. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிஸார் மற்றும் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து டெரிக் சாவின் உள்பட 4 பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில்,டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அவர் தொடர்பான வழக்கு விசாரணை, மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த வாரம் தொடங்கியது.‌ அப்போது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த டெரிக் சாவின் தனது பொலிஸ் பயிற்சியை முறையாக பின்பற்றியதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.‌

இந்த வழக்கில் டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் கொலைவழக்கில் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டொலர்நிவாரணமாக வழங்க மினியா பொலிஸ் நகர அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞர் பெஞ்சமீன் கிரம்ப் கூறுகையில், அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரணத்துக்கான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் மிகப்பெரிய நிவாரணம் இது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!