“காங்கிரஸ் கதர் அரசியல், பா.ஜ.க. காவி அரசியல் நடத்துகிறது” – சீமான் பேச்சு!

புதுச்சேரி ரோடியர் மில் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் போட்டியிடும் 28 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

அரசியல் போர்

உலகத்தில் தொன்மையான இனமும், மூத்தகுடியும் தமிழர்கள். வரலாற்று பெருமை கொண்ட மொழி தமிழ். உலகிற்கே விவசாயம் செய்ய கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். வேரை இழந்த மரமும், வரலாற்றை இழந்த இனமும் வாழாது.நாம் நமது வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது அரசியல் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. நான் எனது கடமையை சரியாக செய்து வருகிறேன்.

மீனவர், மாணவர்கள், விவசாயிகள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு அவரவர் தான் போராட வேண்டும் என அனைவரும் நினைக்கிறீர்கள். அது தவறு. தமிழ் இன தலைமுறை விலகி இருக்கக்கூடாது. புரட்சிகர அரசியல் மாறுதலுக்கு தாயராக இருக்க வேண்டும்.

கதர், காவி அரசியல்

காங்கிரஸ் கட்சி கதர் அரசியல் செய்கிறது. பா.ஜ.க. காவி அரசியல் நடத்துகிறது. காங்கிரஸ், பா.ஜ.க.வை நம்பி எத்தனை நாட்கள் ஏமாறுவீர்கள். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாடு பேராபத்தை நோக்கிச் செல்கிறது.இந்தியா இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. தமிழகம், புதுச்சேரி அரசுகள் மக்களை படிக்க வைக்காமல், குடிக்க வைக்கிறது. அரசியல்வாதிகளிடம் உள்ள பணத்தில் 50 ஆண்டுகள் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.

எங்களுக்கு மாகி, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். நாம் எதை இழந்தாலும் மானத்தை இழந்து வாழக்கூடாது. புதுச்சேரியை புதுமையாக மாற்ற அனைவரும் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண் டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர்கள் விவரம்

புதுவை மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:-

திருபுவனை-ரஞ்சித், தட்டாஞ்சாவடி-ரமே‌‌ஷ், லாஸ்பேட்டை-நிர்மல் சிங், காலாப்பட்டு-காமராஜ், உருளையன்பேட்டை-கருணாநிதி, நெல்லித்தோப்பு-சசிகுமார், முதலியார்பேட்டை-வேலவன், அரியாங்குப்பம்-சுந்தரவடிவேலு, மணவெளி-இளங்கோவன், ஏம்பலம்-குமரன், பாகூர்-ஞானபிரகா‌‌ஷ், திருநள்ளாறு-சிக்கந்தர் பாட்‌ஷா, காரைக்கால் (தெற்கு)-மரி அந்துவான், நிரவி திருப்பட்டினம்-முகமது யூசுப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பெண்கள்

மண்ணாடிப்பட்டு-சித்ரா, ஊசுடு-கீதா பிரியா, மங்களம்-பாரத் கலை, வில்லியனூர்-பிரவீனா, உழவர்கரை-பிரியா, கதிர்காமம்-சுபஸ்ரீ, இந்திரா நகர்-தேவிகா, காமராஜ் நகர்-சர்மிளா பேகம், முத்தியால்பேட்டை-பரிதாபேகம், ராஜ்பவன்-அந்தோணி சர்மிளா, உப்பளம்-தேவி பிரியா, நெட்டப்பாக்கம்-கவுரி, காரைக்கால் நெடுங்காடு-நிவேதா, காரைக்கால் வடக்கு-அனுசுயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!