எதிர்வரும் பண்டிகைக்காலங்களில் பயணத்தடை விதிக்கப்படுமா?- இராணுவ தளபதி விளக்கம்

நாட்டில் தேவையேற்படும் பட்சத்தில் எதிர்வரும் பண்டிகைக்காலங்களில் பயணத்தடை விதிக்கப்படும் என ராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் குறித்த விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த நத்தார் பண்டிகையின் பின்னரான காலப்பகுதி முதல் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாது செயற்படுவதாகவும் ராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறை தொடர்பான புதிய திருத்தம் இன்றைய தினத்துக்குள் வெளியிடுவதற்கு எதிர்ப்பாரத்துள்ளதாக ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலஎல்லையில் மாற்றம் ஏற்படுத்தல் மற்றும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு இன்றி பி சி ஆர் பரிசோதனை மாத்திரம் மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக சுற்றுலாத்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சுற்றுலா துறையினருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!