அக்காவையும் அத்தானையும் விஷம் வைத்துக் கொலை செய்தது எப்படி? – தங்கையின் பகீர் வாக்குமூலம்

அக்காவையும், அத்தானையும் விஷம் வைத்துக் கொலை செய்தது எப்படி?” என்று மைதிலி போலீஸாரிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். `நான் செய்தது தவறுதான்’ என்று பாலமுருகன் கூறியுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம், மீனாட்சி தம்பதி கடந்த 2017, ஜனவரியில் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். ஒரு வருடம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. இந்த வழக்கில் மீனாட்சியின் தங்கை மைதிலி, தம்பி உறவுமுறை பாலமுருகனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துப்பு துலங்கியது எப்படி என்று போலீஸாரிடம் கேட்டபோது, அவர்கள் திகில் சம்பவத்தை விவரித்தனர்.

“தர்மலிங்கம், மீனாட்சி இறப்பைக் கொலை என்று அவரின் உறவினர்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தனர். ஆனால், அதுதொடர்பாக எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்தச் சமயத்தில்தான் முக்கியத் தடயமாக பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் மாறியது. தர்மலிங்கம், மீனாட்சி ஆகியோரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என்று தெரியவந்தது. இதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்களா என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

தர்மலிங்கம், மீனாட்சி இறப்பில் ஆரம்பத்திலிருந்தே அவரின் தங்கை மைதிலி மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மைதிலியின் தம்பியான பாலமுருகனும் எங்களின் சந்தேக வளையத்தில் இருந்தார். தர்மலிங்கம், மீனாட்சி ஆகியோரின் மரணத்துக்குப்பிறகு மைதிலி, பாலமுருகன் ஆகியோர் சந்தோஷமாக இருந்தனர். அதோடு அவர்களிடம் பண நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இதுதான் அவர்கள் மீது எங்களின் சந்தேகம் மேலும் வலுத்ததது. இருவரையும் தனித்தனியாக விசாரித்தோம். அப்போது, கொலையை மைதிலி ஒத்துக் கொண்டதாக பாலமுருகனிடம் தெரிவித்தோம். அதுபோல மைதிலியிடம் இந்தத் தகவலைக் கூறினோம். இதனால், இருவரும் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தொடங்கினர்.

பாலமுருகன் கொடுத்த வாக்குமூலத்தில், தர்மலிங்கமும், மீனாட்சியும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். மைதிலியுடன் நான் பழகியதை அவர்கள் விரும்பவில்லை. அதைக் கண்டித்தனர். ஆனால், எங்களின் பழக்கம் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் தர்மலிங்கம், என்னை சரமாரியாகத் தாக்கினார். அப்போது, மைதிலியுடன் பழகுவதை நிறுத்தவில்லை என்றால் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதனால்தான், மாமா தர்மலிங்கத்தையும் அக்காள் மீனாட்சியையும் கொலை செய்ய திட்டமிட்டேன். இருவருக்கும் விஷம் கலந்து நானும் மைதிலியும் கொடுத்தோம். அப்போது நான் செய்தது தவறு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போதுதான் நான் செய்தது தவறு என்று தெரிகிறது. இதற்காகத்தான் சிறைக்குச் செல்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

அதுபோல மைதிலி எங்களிடம், `பாலமுருகனுடன் பழகிய பிறகு என்னுடைய வாழ்க்கை திசைமாறிவிட்டது. அவர் சொல்வதை கேட்டேன். அக்காவையும் அத்தானையும் விஷம் வைத்துக் கொன்ற பிறகு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒருவித பயத்தில்தான் வாழ்ந்தேன். கையில் பணமிருந்தும் நிம்மதியில்லை. குற்ற உணர்வால் தினமும் செத்துக்கொண்டிருந்தேன். ஆனால், போலீஸார் எங்கள் இருவரையும் கைதுசெய்துவிட்டனர்’ என்று கூறினார். மைதிலியும் பாலமுருகனும் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றே முதலில் கருதியுள்ளனர். இருவரையும் கொலை செய்தபிறகு பணம், சொத்துகளை அபகரித்ததால்தான் எங்களிடம் ஆதாரத்துடன் சிக்கிக்கொண்டனர்” என்றனர்.

இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது மைதிலியும் பாலமுருகனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் கூடா நட்பால் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளது என்கின்றனர் உறவினர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!