மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிரூபத்திற்கமைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் இன்று மேல் மாகாணத்தில் சகல மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன

மேல் மாகாணத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தரம் 5 , 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன

இவை தவிர நாட்டின் ஏனைய மாகாணங்களில் அனைத்து பாடசாலைகளிலும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் ஏனைய வகுப்புக்களுக்கு முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் ஏப்ரல் 19 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது

இந்த நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை உள்ளடங்கிய சுற்று நிரூபம் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் , வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்று நிரூபத்திற்கமைய மேல் மாகாணத்தில் ஏதேனும் பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுமாயின் அந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வகுப்பறையொன்றில் 15 மாணவர்கள் மாத்திரம் காணப்படுவார்களாயின் அவர்களுக்கு தினமும் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவும் மாணவர்களின் எண்ணிக்கை 16 தொடக்கம் 30 க்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டால் மாணவர்களை இரு பிரிவினராக பிரித்து தனித்தனியே கற்பித்தலில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்புக்களில் 3 குழுக்களாக பிரித்து கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 9 ஆம் திகதியுடன் நிறைவகின்ற நிலையில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!