மாகாண சபைத் தேர்தல் சட்டம் மறுசீரமைக்கப்படுமா?- உதய கம்மன்பில விளக்கம்

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை முறைமையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம், அமைச்சரவையில் நேற்று முன்வைக்கப்பட்டது. இதன்படி நிலையியல் மாகாண சபையொன்றை நிறுவும் நோக்கில், மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு வழங்கப்படும் 2 போனஸ் ஆசனங்களை மேலும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 ஆசனங்கள் என்ற அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உதாரணமாக மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ள நிலையில் மேல் மாகாணத்திற்கான போனஸ் ஆசனத்தை ஆறாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நூற்றுக்கு 70 வீதமானவர்களை தொகுதிவாரியாகவும். 30 வீதமானவர்களை விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்க இந்த சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு தொகுதியிலிருந்து ஒரு கட்சியின் ஊடாக, மூன்று வேட்பாளர்களை முன்னிறுத்தவும், யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!