இந்தியாவில் ரஷிய தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவிருக்கும் மத்திய அரசு!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை செலுத்தி வருகிறார்கள். அதன்படி 7 கோடியே 30 லட்சம் பேருக்கு இதுவரை ஊசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே அதை கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசியை அதிகப்படுத்துவது பற்றி குறித்தும் விவாதித்தார்.

கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை அனுமதிப்பது என்று முடிவு செய்தனர். இந்தியாவில் ஏற்கனவே 2 மருந்துகள் உருவாக்கி உள்ள நிலையில் ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ஸ்புட்னிக் -வி’ என்ற தடுப்பூசி மருந்தையும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்தன.

இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேபரட்டரி நிறுவனம் ஒப்பந்தம் செய்து இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதன் பரிசோதனையும் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு அளித்து இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல் தரும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை என்று கூறி மேலும் விவரங்களை கேட்டு இருந்தனர்.

அந்தவிவரங்களை மருந்து நிறுவனம் வழங்க உள்ளது. இதையடுத்து விரைவிலேயே ரஷிய மருந்துக்கும் அனுமதி அளிக்க உள்ளனர். இன்னும் 10 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளுடன் இணைந்து ஸ்புட்னிக்-வி மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!