மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!

நீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை மற்றும் மகன் இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாப பலியானதால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி (35), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கீர்த்தனா (10) மற்றும் ஜெகதீஷ் (8) பிள்ளைகள் உள்ளனர். சென்னையில் பணியாற்றி வரும் பாலாஜி, மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் பாலாஜி.

கடந்த 6ம் தேதி காலை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செலுத்திவிட்டு வீடு திரும்பிய பாலாஜி தனது குழந்தை ஜெகதீஷ்க்கு நீச்சல் கற்றுத்தர கூடிச் சென்றுள்ளார்.

அப்போது, 5 லிட்டர் கோல்டு வின்னர் பிளாஸ்டிக் டப்பாவை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். தங்களது விவசாய கிணற்றில் சென்று ஜெகதீசன் இடுப்பில் கோல்டு வின்னர் டப்பாவை கட்டி நீச்சல் பழக கற்றுக் கொடுத்திருக்கிறார்.

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெகதீஷ் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளது. இதனால், ஜெகதீஷ் கிணற்றுக்குள் உயிருக்கு போராடினான்.

இதனை சற்றும் எதிர்பாராது கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டிருந்த பாலாஜி தனது குழந்தை கிணற்றுக்குள் செல்வதைப் பார்த்து குழந்தையை காப்பாற்ற கிணற்றுக்குள் பாலாஜி குதித்தார்.

குதித்த வேகத்தில் பாலாஜி கிணற்றில் உள்ள சேற்றில் சிக்கி கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் கிணற்றுக்கருகில் ஓடி வந்தனர்.

உடனே அவர்கள் பாலாஜி மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டு போட ஊர் திரும்பிய பாலாஜி மற்றும் அவருடைய குழந்தை இருவரும் கிணற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!