போதைபொருளுடன் தொடர்புடைய விடயங்களை கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்கை விரைவில் நடைமுறை

போதைபொருள் சார்ந்த விடயங்களை கட்டுப்படுத்துவதற்கான தேசிய கொள்கைகள் தயாரிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த தேசியக் கொள்கையானது விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போதைபொருளுக்கு அடிமையானவர்களுக்கு புணர்வாழ்வு அளிக்கும் போது, மத ரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மதரீதியான தீவிரவாதத்தையும் ஒழிக்கும் வகையில் தீவிரவாத நோக்குடைய அனைத்து புத்தகங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒருசில மதங்களை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அங்கவீனர்களாக உள்ள இராணுவ வீரர்களுக்கான கொடுப்பனவுகளை, அவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள் இந்த திட்டத்தின் ஊடாக பயனடைய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை சேவையில் உள்ளீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!