முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இராஜாங்கஅமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரசாங்கத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் 11 கட்சிகள் ஒன்றிணைந்து, கடந்த 08 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தன.

பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கு ஆதரவு வழங்கவும், தமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலுமே தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.

எனினும், எதிர்க் கட்சிக்கு நன்மைகள் ஏற்படும் வகையில், இதன்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் மற்றும் எதிர்வரும் மே தின நிகழ்வுகளை நடத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!