புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவோம்! – அமெரிக்கா அறிவிப்பு.

இலங்கையின் புலம்பெயர் அமைப்புக்களுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் இருக்கும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடைசெய்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் தமது இணைப்புக்காகப் புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பெறுமதிமிக்க பங்காளிகளாகச் செயற்படுகின்றன. எனவே தென்னாசிய புலம்பெயர் அமைப்புக்கள் உட்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தாம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் இணைந்திருக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக தமிழர் பேரவை (ஜிடிஎப்), பிரித்தானியத் தமிழ் பேரவை( பிடிஎப்), கனேடியன் தமிழ் காங்கிரஸ் (சிடிசி), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ஏடிசி), கனேடிய தமிழர்களின் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலக தமிழர் இணைப்புக்குழு என்பன இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிக்கு இணங்கவே இந்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!