பரிதவிக்கும் ஒன்ராறியோ: பிரதமர் ட்ரூடோ அளித்த உறுதி!

கொரோனா மூன்றாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் ஒன்ராறியோவுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளார். கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோ தற்போது கொரோனா மூன்றாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒன்ராறியோவிற்கு அதிகமான சுகாதாரப் பணியாளர்களை அனுப்ப மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள பிரதமர் ட்ரூடோ, அதில், ஒன்ராறியோவில் முன் வரிசையில் ஈடுபட அரசாங்கத் துறைகளில் இருந்து பெடரல் சுகாதாரப் பணியாளர்களை முதலாவதாக அணிதிரட்டுவதாகவும்,

குறிப்பாக நிலைமை மிகவும் முக்கியமானதாக இருக்கும் கிரேட்டர் டொராண்டோ பகுதிக்கு முன்களப் பணியாளர்களின் தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு மாகாண தலைமைகளிடம் நேரிடையாக பேசியதாக கூறும் பிரதமர் ட்ரூடோ, அவர்களால் முடிந்த உதவியை கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவான சோதனை, பாதிப்புக்குள்ளான முதன்மை பகுதிகளை கண்டறிந்து துரித நடவடிக்கை, குறிப்பாக அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பணியிடங்களுக்கு சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க பிரதமர் உறுதியளித்துள்ளார்.

ஒன்ராறியோ மாகாணத்தில் ஞாயிறன்று மட்டும் புதிதாக 4,250 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!